அன்பான சிநேகிதரே, அமைதியாக நாம் அமர்ந்து ஆண்டவர் அதிசயமாக இலவசமாய் அளித்திருக்கும் இரட்சிப்பை பற்றியும், நித்திய ஜீவனை கொடுப்பேன் என்ற உறுதி மொழியையும் நினைத்து பார்ப்போம்.
இரட்சிப்பு, விடுதலை, இலவசமாக ஆண்டவர் தருவது. நாம் செய்யும் கிரியைகளுக்கு பரிசாகவோ, அல்லது தியாகத்தாலோ இரட்சிப்பு பெற முடியாது. ஆண்டவர் கொடுக்கும் இரட்சிப்புக்கு நாம் பதில் ஒன்றும் செய்ய முடியாது. அல்லது அதை சம்பாதிக்கவும் முடியாது.
அது தகுதியற்றவர்களுக்கு கொடுக்கப்படும் வெகுமதி. இயேசுவின் அன்பால் பாவிகளாகிய நமக்கு அவர் கொடுப்பது. வேதத்தில் இது கிருபை என்று சொல்லப்படுகிறது. வேதத்தில் ஆண்டவர் “கிருபையினாலே விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது கிரியையினால் உண்டானது அல்ல“ என்று கூறியிருக்கிறார். நம்மால் நம்மை இரட்சித்து கொள்ள முடியாது. இயேசு மேல் நாம் கொண்டுள்ள நம்பிக்கை மாத்திரமே நமக்கு நித்திய ஜீவனை தருகிறது. சுவிசேஷத்தின் எளிமையான ஆனால் அழகான உண்மை இது.
நீங்கள் ஒரு வேளை இப்படி நினைக்க துவங்கலாம்: “நான் இரட்சிப்பை பெற்றிருக்கிறேன். இயேசு என் பாவங்களை மன்னித்திருக்கிறார். பரலோகத்திற்கு என்னை அழைத்து செல்வார். நான் ஏன் நல்ல கிரியைகள் செய்ய வேண்டும்? நான் எனக்கு விருப்பமான காரியத்தை செய்வேன்” அப்படி நாம் செய்யலாமா? அதை குறித்து பார்ப்போம்.
ஆண்டவர் இயேசுவிடம் நாம் பாவமன்னிப்பு கேட்கும் போது நம்மை பரிசுத்தப்படுத்தி புதிதாக்குகிறார். நாம் இப்பொழுது ஆண்டவர் குடும்பத்தில் மறுபடியும் பிறந்திருக்கிறோம். பிறந்த சிறு குழந்தை போல நம்முடைய ஆவிக்குரிய வாழ்வை துவங்குகிறோம். சிறு குழந்தை எப்படி தாயை சார்ந்து இருக்கிறதோ அப்படியே நாமும் ஆண்டவரை சார்ந்து இருக்கிறோம். ஆண்டவர் நம்மை கை பிடித்து நடத்துகிறார். அவர் நமக்கு ஏற்படுத்தியிருக்கும் வாழ்வு வெருமையானதல்ல. அது அவருக்கென்று நாம் நல்ல கிரியைகள் செய்ய ஏற்படுத்தப்பட்ட நிறைவான வாழ்வு.
பழைய பாவ விருப்பங்கள் இப்பொழுது நம்மை விட்டு போய் விட்டது. நாம் அவைகளை இப்போது வெறுக்கிறோம். சாத்தானால் பழைய வாழ்க்கைக்கு செல்ல சோதிக்கப்பட்டாலும் நாம் ஆண்டவரை தேடி அவர் பலனை பெற்று கொண்டு அவைகளை மறுக்கிறோம்.
வேதத்தில் எபேசியர் 2:10 இல் வாசிக்கிறோம்: “நற்கிரியைகளை செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாய் இருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.”
ஆண்டவர் என்ன நற்கிரியைகள் நமக்கு வைத்து இருக்கிறார்? மற்றவர்களுக்கு சேவை செய்வது ஆண்டவருக்கு செய்யும் சேவையே – எல்லாரிடமும் அன்புடனும் தயவுடனும் இருப்பது, மக்களுக்கு தேவையான உதவி சந்தோஷமாக செய்வது, யாவருக்கும் ஆண்டவர் இயேசுவை பற்றியும் ரட்சிப்பை பற்றியும் சொல்வது, போன்றவைகளே.
அன்பான சிநேகிதரே, நாம் ஆண்டவர் கொடுத்திருக்கும் ஆச்சரியமான இரட்சிப்பில் மகிழும் போது, அவர் நம்மை மோட்சத்துக்கு செல்ல அழைக்கும் வரை, இந்த வாழ்க்கையில் என்ன நல்ல கிரியைகள் செய்ய அழைத்து இருக்கிறார் என்று ஆவலாய் அறிந்து கொள்ளுவோமாக. அதை சந்தோஷமாக செய்ய முற்படுவோமாக.
ஜெபம்: “பரலோக தந்தையே, அர்த்தமற்ற சுயநலமான வாழ்வை நான் வாழாத படி உமக்கென்று நல்ல கிரியைகள் செய்கிற புதிய வாழ்வை வாழ உதவி செய்யும், ஆமென்”