முதலடி 21: சாத்தான் – ஆண்டவருடைய பகைவன், நம் பகைவன்

உலகத்திலுள்ள தீய சக்திகளை குறித்து நீ நினைத்தது உண்டா? அவைகள் எங்கிருந்து வருகிறது? யார் அதற்க்கு காரணம்?

தவறான காரியங்கள் என்று அறிந்திருந்தும் அதிலே தொடரும் படியாகவும் அதை அனுபவிக்கும் படியாகவும் உனக்குள்ளே எழும்பும் சத்தத்தை கேட்டிருக்கிறாயா?

வேதம் சொல்லுகிறது: தீமையான காரியங்கள் யாவற்றிற்கும் சாத்தானே காரணம்.  அவன் ஆண்டவரை எதிர்ப்பவன். மனிதர்கள் யாவரையும் ஆண்டவருக்கு கீழ்படியாமல் அவருக்கு விரோதமாக பாவம் செய்ய தூண்டுபவன்.

வேதத்தின் முதல் புத்தகத்திலேயே சாத்தானை குறித்து சொல்லபட்டிருக்கிறது. தேவனாகிய ஆண்டவர் ஆதாம், ஏவாளுக்கு ஏதேன் என்ற அழகான தோட்டத்தை உண்டாக்கி அதில் வாழ்ந்து அனுபவிக்கும் படி செய்தார். “தோட்டத்தின் நடுவில் உள்ள  ஒரு மரத்தின் கனியை மாத்திரம் புசிக்கதீர்கள். புசித்தால் சாவீர்கள்” என்றும் கூறினார்.

ஒரு நாள் சாத்தன் அவர்களை சோதிக்க வருகிறான். “அந்த கனியை புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னாரா? அப்படி இல்லை. புசித்தால் நீங்கள் சாக மாட்டீர்கள்.” என்று அவர்களிடம் பொய் சொல்கிறான்.

எல்லா பாவமும் பார்வைக்கு அழகாக இருப்பது போலவே அந்த கனியும் பார்வைக்கு அழகாக இருந்தது. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் சரியான வழியை தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. தேவனுக்கு கீழ்படியலாமா அல்லது சாத்தானுக்கு கீழ்படியலாமா?

பரிதாபமாக அவர்கள் தேவனுடைய கட்டளையை தள்ளி விட்டார்கள். தேவனுக்கு கீழ்படியாமல் சாத்தானுக்கு கீழ்படிந்து விட்டனர். தேவன் புசிக்க கூடாது என்று சொன்ன பழத்தை பறித்து புசித்தனர்!

அந்த ஒரு பாவம் அவர்களை தேவனை விட்டு பிரித்தது. தேவனோடு கொண்டிருந்த உறவு, ஏதேன் தோட்டத்தில் அவர் கொடுத்திருந்த பாதுகாப்பு, அரவணைப்பு எல்லாவற்றையும் இழந்தனர்.

சாத்தான் வெற்றி பெற்றான். தன்னுடைய ஆளுகைக்குள் அவர்களை இழுத்து  கொண்டான். அவர்களுடைய ஆத்துமாவையும், அவன் சிறைபடுத்தி அடிமை படுத்தி  விட்டான். அவர்களுடைய சந்ததி பாவத்தில் பிறந்து, தனக்கு கீழ்படிந்து நம்பிக்கை இல்லாமல் மரிக்கவும் செய்தான்.

சாத்தானின் திட்டம் நிறைவேறி இருந்தால் அது எவ்வளவு பயங்கரமாக இருந்திருக்கும்! நாம் எல்லோரும் சாத்தானை பின்பற்றி நரகத்திற்கு பாத்திரராய் இருந்திருப்போம். சாத்தானுக்கும் அவனுடைய அசுத்த ஆவிகளுக்கும் தேவன் உண்டு பண்ணி வைத்திருக்கும் இடம் நரகம் ஆகும்.

ஆனால் தேவன் நம் மேல் வைத்த மட்டற்ற அன்பினால் சாத்தனுடைய பிடியில் நம்மை விட்டு விடாமல் நம்மை விடுவிக்கும் ரட்சகரை இவ்வுலகில் அனுப்பினார்.

“ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்“ என்று வேதத்தில் யாக்கோபு 4:7 இல் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஜெபம்: “அன்புள்ள ஆண்டவரே, எங்களுடைய வாழ்க்கையில் சாத்தானுக்கு கீழ்படியாமல் உமக்கே கீழ்படிய உதவி செய்யும். ஆமென்” 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *