உலகிலுள்ள எல்லா மார்க்கத்தினரும் மோட்சமாகிய பரலோகத்திற்கு செல்ல விரும்புகிறார்கள். பரலோகம் அருமையான இடம் என்பது அவர்களுக்கு தெரியும்.
நல்ல கிரியைகளான ஏழைகளுக்கு இரக்கம் காட்டுதல், தேவையுள்ளவர்களுக்கு உதவுதல் போன்ற காரியங்களை செய்து அதன் மூலம் பரலோகத்திற்கு செல்ல முயற்சி செய்கிறார்கள்.
பரலோகத்திற்கு செல்ல அவர்களே வழியை உண்டாக்க பார்கிறார்கள். தங்களது நல்ல செயல்களை பார்த்து கடவுள் தங்கள் பாவங்களை கண்டு கொள்ளாமல் பரலோகத்தில் சேர்த்து கொள்வார் என்று எண்ணுகிறார்கள்.
இன்னும் அநேகர் தங்களை வெறுத்து, உபவாசம் பண்ணி, ஜெபித்து, தங்களுக்கு விருப்பமான காரியங்களை துறந்து, தங்களை வேதனை படுத்தி கொள்கிறார்கள். இதன் மூலம் தேவனை சந்தோஷப்படுத்தி பரலோகத்திற்கு செல்ல முடியும் என்று நினைக்கிறார்கள்.
அனைத்து நற்கிரியைகளும் நல்லதாக இருந்தாலும் மலை போன்ற குவிந்திருக்கும் நம் பாவங்களை போக்கி பரலோகத்திற்கு செல்ல அவைகள் நம்மை தகுதி படுத்தாது.
கடவுள் பரிசுத்தமானவர். எந்த விதமான அசுத்தத்தையும் பரலோகதிற்க்குள் அனுமதிக்க மாட்டார். “என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்” என்று வேதத்தில் தாவீது என்ற பெரிய அரசன் கூறுகிறார்.
கல்வாரி சிலுவையில் ஆண்டவர் இயேசு எனக்காக சிந்திய பரிசுத்த இரத்ததினால் என் இருதயத்தின் பாவ கரைகள் கழுவப்பட்டு இருப்பதால் அவரை துதிக்கிறேன். ஆண்டவர் இயேசுவின் தியாகத்தால் நான் இப்பொழுது பரிசுத்தமாக்க பட்டிருக்கிறேன். ஆகையால் பரலோகத்தில் தேவன் என்னை வரவேற்பார்.
நாம் யாரும் நம் கிரியைகளினால் பரலோகத்திற்கு செல்ல முடியாது. இயேசுவின் ரத்தத்தினால் நம் பாவங்கள் கழுவப்படுவதன் மூலம் பரலோக வாழ்வை இலவசமாக பெற்றிருக்கிறோம். என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயம் எனக்கு இருப்பதால் பரலோகத்திற்கு செல்வேன் என்ற நம்பிக்கையோடு நான் பாடுகிறேன்.
உன்னால் அப்படி பாட முடியுமா, நண்பனே? இந்த உலகத்தில் நாம் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் இருந்தாலும் நம்முடைய தந்தையின் வீட்டில் சந்திக்க போகும் நாளை ஆவலோடு நான் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன்.
ஜெபம்: “அன்புள்ள தகப்பனே, விலையேறப்பெற்ற பரலோகத்தின் நித்திய வாழ்வை ஆண்டவர் இயேசு மூலம் எனக்கு தந்தீரே! உம்மை தாழ்மையாய் நன்றியுடன் துதிக்கிறேன். ஆமென்”