ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகத்தின் ரட்சகர்! அவர் உலகத்திற்கு வந்த நோக்கத்தை நிறைவேற்றும் நேரம் வந்தது. அவர் பாவிகளாகிய நம்மை மீட்க்க இவ்வுலகத்திற்கு வந்தார். தம்முடைய சீஷர்களிடம் தாம் மரிக்க போவதை பற்றி கூறினார். அவர்கள் அதை கேட்டு மிகுந்த சஞ்சலம் அடைந்தார்கள். ஆனால் “மூன்றாம் நாள் நான் உயிரோடு எழுந்து வருவேன்” என்ற சந்தோஷ செய்தியை அவர்களுக்கு அறிவித்தார்.
மக்களின் பாவங்களை மன்னிப்பேன் என்று அவர் கூற கேட்ட மத தலைவர்கள் அவர் மேல் கோபப்பட்டனர். இயேசுவை அதிகமான மக்கள் பின்பற்றியதால் பொறாமை கொண்டனர். தேவனை தம்முடைய தந்தை என்று அவர் கூறியதால் அவரை கைது செய்தனர்.
கொலை குற்றம் செய்பவர்களுக்கு கொடுக்கும் கொடிய தண்டனையான சிலுவை மரணத்தை அவருக்கு கொடுத்தனர். ரோம கவர்னர் அவரிடத்தில் ஒரு குற்றமும் நான் காணவில்லை என்று சொன்னார். ஆனாலும் மத தலைவர்கள் வார்த்தைகளை கேட்டு அவர்களை எதிர்க்காமல் இருந்தார்.
மக்களிடம் அன்பு செலுத்தி, பாவமே செய்யாத, எல்லோருக்கும் பணிவிடை செய்த, நன்மைகள் மாத்திரமே செய்து வந்த தேவனுடைய குமாரன் இயேசு சிலுவையில் அறையப்பட்டு சாக ஒப்பு கொடுக்கப்பட்டார்.
ஆண்டவராகிய இயேசுவை வாரினால் அடித்து, இழிவாக பேசி, முள்ளால் செய்யப்பட்ட கிரீடம் ஒன்றை அவர் தலையில் சூட்டினார்கள். அத்தனை பாடுகளையும் ஏற்று கொண்டதால் அவர் மிக பலவீனமானார். அவருடைய சிலுவையை எடுத்து கொண்டு மலை மீதில் ஏறி போக செய்தனர். அங்கு அவர் கைகளிலும், கால்களிலும் ஆணி அடித்து சிலுவையில் அறைந்தனர். நமக்காக அவர் பாடு பட்டதால் அவ்வளவு வேதனைகளையும் சகித்து கொண்டு அமைதியாக இருந்தார்.
ஒருவராலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை கைது செய்து சிலுவையில் அறைய முடியாது. ஏனெனில் அவர் கடவுள். நம்முடைய பாவங்களில் இருந்து நம்மை விடுவிக்க பாவத்தின் தண்டனையாகிய மரணத்தை அவர் நமக்காக ஏற்று கொள்ள இந்த உலகத்திற்கு வந்தார். அதனால் தான் யாரையும் அவர் எதிர்க்கவில்லை. தாமாகவே முன் வந்து சிலுவைக்கு சென்று நமக்காக பாடுகளை அனுபவித்தார்.
சிலுவையில் இயேசு தொங்கும் பொழுது உலகத்திலுள்ள எல்லாருடைய பாவங்களையும் நம் பாவங்களையும் சுமந்து கொண்டார். நம்முடைய தோல்விகள், அவமானங்கள், குற்றங்கள் எல்லாவற்றையும் அவர் தன் மேல் எடுத்து கொண்டார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவை மரணம் அடைந்து நமது ரட்சிப்பை நிறைவேற்றினார். இருதயம் உடைந்த நிலையில் துக்கத்தோடு அவருடைய சீஷர்கள் தோட்டத்தில் இருந்த கல்லறையில் அவருடைய உடலை வைத்ததை பார்த்தனர்.
ஆனால் மூன்றாம் நாள் அவர்களுக்கு மகிமையான, ஆச்சரியமான காரியம் காத்திருந்தது!
ஜெபம்: “ஆண்டவரே, நீர் அற்பமான எனக்காக பாடுபட்டு உயிரை கொடுத்தீரே, பாவியாகிய என்னை பாவத்திலிருந்து விடுதலை செய்ய நீர் செய்த மகத்தான தியாகத்துக்காக உம்முடைய பாதத்தில் விழுந்து உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்”