நம்மை சாத்தானின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க வந்த ஆண்டவர் இயேசுவை துதிக்கிறேன்.
இரட்சிக்கப்பட்ட நாம் ஆண்டவர் இயேசுவுக்கு சொந்தமானவர்கள். அவருடைய பராமரிப்புக்குள் இருக்கும் நாம் அவருடைய பிள்ளைகள். சாத்தான் தோற்கடிக்கப்பட்ட பகைவன். சாத்தான் இந்த உலகத்தையும் அதிலுள்ள மக்களையும் ஆளுகை செய்கிறான். வேதம் சாத்தானை பிசாசு என்றும் இந்த உலகத்தை ஆள்பவன் என்றும் சொல்லுகிறது.
ஆண்டவர் சாத்தானை சிறிது காலம் இந்த உலகத்தில் விடுதலையாக விட்டிருக்கிறார். சீக்கிரத்தில் சாத்தானையும், அவனுடைய தூதர்களையும் அவர்களுக்காக ஏற்ப்படுத்தின நரகத்தில் தள்ளி விடுவார்.
ஆதாம், ஏவாளுக்கும் தேர்ந்து எடுக்கும் உரிமையை கொடுத்திருந்த தேவன் நமக்கும் நம் வாழ்வில் தேர்ந்து எடுக்கும் அதிகாரத்தை கொடுத்திருக்கிறார். நாம் ஆண்டவரை நேசித்து, கீழ்படிந்து அவர் பிள்ளையாக வாழலாம்.
ஆண்டவர் இயேசுவை என் சொந்த ரட்சகராக ஏற்று கொண்ட போது நான் அவருடைய பக்கம் சார்ந்தேன். சாத்தானிடமிருந்து நான் விடுதலை பெற்றேன். இப்பொழுது அவன் என்னுடைய பகைவன். ஆண்டவர் என்னை நேசிக்கவில்லை என்று என்னை நம்ப வைத்து அவரை விட்டு என்னை பிரிப்பதே சாத்தானுடைய நோக்கமாக இருக்கிறது.
சாத்தான் வல்லமை உள்ளவன். அவன் இப்பொழுது என்னை எப்படியாகிலும் மறுபடியும் தன் பக்கம் கொண்டு செல்ல பிரயாச படுகிறான். இந்த உலகின் கவர்ச்சியையும் ஆடம்பரத்தையும் காட்டி என்னை சோதிக்கிறான். உபத்திரவங்களையும் பாடுகளையும் கொடுத்து என்னை தடுமாற செய்கிறான்.
ஆனால் வேதம் கூறுகிறது “உலகத்தில் இருக்கிறவனை பார்க்கிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர்”. 1 யோவான் 4:4 “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடி போவான்.” யாக்கோபு 4:7
ஆகையால் சிநேகிதனே, சாத்தானை பார்த்து பயப்படாதே. ஆண்டவர் இயேசுவிடம் வா. அவரிடத்தில் பாதுகாப்பு உண்டு. ஆண்டவர் இயேசுவின் பக்கம் இருந்து அவரை பின்பற்ற நான் விரும்புகிறேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் எனக்கு சாத்தனுக்கு எதிர்த்து நிற்கவும் ஆண்டவர் இயேசுவுக்காக தினம் தோறும் வாழவும் தேவையான சக்தியை கொடுக்கிறார்.
ஜெபம்: “ஆண்டவர் இயேவே, சாத்தானுடைய சோதனைகளின் தாக்குதலுக்கு எதிர்த்து நிற்க என்னை பலப்படுத்தி எப்பொழுதும் உமக்காக வாழ உதவி செய்யும். ஆமென்”