ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிறக்கும் நேரம் வந்த போது மரியாளும், யோசேப்பும் பெத்லேகேம் என்ற ஊரில் இருந்தனர்.
வழி போக்கர் தங்கும் இடமாகிய சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லை. அதனால் ஆடு, மாடுகள் இருக்க கூடிய தொழுவத்தில் தங்கினார்கள். அங்கு தான் இயேசு பாலகன் பிறந்தார். அங்கு ஆடு மாடுகளுக்கு தீனி வைக்க இருந்த பெட்டியில் மரியாள் குழந்தையை துணியில் சுற்றி படுக்க வைத்தாள்.
நம்மை பாவத்திலிருந்து விடுதலை செய்ய தேவனுடைய மகன் பாவமான உலகத்தில் அவதரித்தார். பாவத்தோடு நாம் தேவனிடத்திற்கு போக முடியாது. அதனால் தேவன் நம்மோடிருக்கும்படி இந்த உலகத்திற்கு வந்தார். பாவத்திலிருந்து நம்மை மீட்க வந்தார்.
அந்த அமைதியான இரவில் தேவன் அவருடைய தூதர்களை அனுப்பி அவருடைய குமாரனுடைய பிறப்பை வயலில் மந்தையை மேய்த்து கொண்டிருந்த மேய்ப்பர்க்கு முதலில் அறிவித்தார். தேவனுடைய மகிமை அந்த மேய்ப்பர்களை சுற்றி பிரகாசித்தது. அந்த தூதர்கள் “உன்னதத்தில் இருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக” என்று பாடினார்கள். மேய்ப்பர்கள் பிறந்திருக்கும் குழந்தை ரட்சகரை பார்க்கும்படி வேகமாக சென்றனர். யாவருக்கும் இதை பற்றி சந்தோஷமாக கூறினர்.
கிழக்கிலிருந்து குழந்தையை பார்க்கும் படி சாஸ்திரிகள் வந்தார்கள். அவர்களுக்கு வழி காட்ட ஒரு விசேஷ நட்சத்திரத்தை தேவன் வானத்தில் வைத்தார். பல நாட்கள் பிரயாணம் பண்ணி இயேசுவை ஒரு ராஜ குழந்தையாக பார்க்க வந்தவர்கள், எளிமையான பெற்றோரிடம் சாதரணமான ஒரு வீட்டில் அவரை பார்த்தனர். ஆனால் அதை குறித்து அவர்கள் சிறிது கூட சந்தேகபடவில்லை. மிகுந்த சந்தோஷத்தோடு தாழ விழுந்து குழந்தையை பணிந்து கொண்டனர். ராஜாவுக்கு கொடுக்க வேண்டிய பரிசு பொருட்களை கொடுத்தனர்.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு பிறந்த நாளை கிறிஸ்மஸ் ஆக கொண்டாடுகிறார்கள். உலகிற்கு வந்த ராஜாவாகிய இயேசுவுக்கு விலை மதிப்பற்ற பரிசு ஒன்று நான் கொடுக்க விரும்புகிறேன். என்னுடைய இருதயத்தையும், வாழ்க்கையையும் அவருக்கு ஒப்பு கொடுக்கிறேன். நீயும் அப்படி செய்வாயா, அருமை சிநேகிதனே?
ஜெபம்: “ஆண்டவராகிய இயேசுவே, இந்த பாவ உலகில் எனக்காக ஒரு குழந்தையாக வந்தீரே. மகிழ்ச்சியோடு உம்மை துதிக்கிறேன். ஆமென்.”